கிழக்கில் மாபெரும் கண்ணகி இலக்கிய விழா

  கிழக்கில் கண்ணகை அம்மன் வழிபாடு இங்குள்ள மக்களின் வாழ்வியலோடு பின்ணிப்பிணைந்த ஒன்றாகும். கிழக்கிலுள்ள குக்கிராமங்கள் தோறும் கண்ணகை அம்மன் ஆலயம் அமைக்கப்பட்டு மிகவும் பக்தி பூர்வமாக அவ்விழா முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 
 கண்ணகி பற்றிய கலை இலக்கியங்களையும்   தழிழர் பண்பாட்டினையும் அவர்தம் கலை வடிவங்களையும் பிரதிபலிக்கும் ஒரு நிகழ்வாக  கிழக்கில் ஒவ்வொரு வருடமும் கண்ணகி கலை இலக்கிய விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றது.  கண்ணகி கலை இலக்கிய விழா இம்முறை ஆறாவது விழாவாக மட்டக்களப்பு வவுண தீவு பிரதேசத்திலுள்ள கன்னன்குடா கிராமத்தில் இன்று ( 25.06.2016 ) மிக விமர்சையாக ஆரம்பமானது.
  
 தொடக்க விழா காலை 6.30 மணிக்கு ஆரம்பமானது இதில் கண்ணகி கலை இலக்கிய பண்பாட்டு அடையாளங்களையும் தழிழர் பாரம்பரியங்களையும் பறை சாற்றும் பண்பாட்டுப் பண்பாட்டுப்பவனியின் ஒரு அணி ஈச்சந்தீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்திலிருந்து விழாக்குழுத் துணைத்  தலைவர் ஞா.ஸ்ரீநேசன் தலைமையிலும் மற்றொரு அணி பருத்திச்சேனையிலிருந்து விழாக் குழு துணைத்தலைவர் சு.முருகேசப்பிள்ளை தலைமையிலும் இன்னுமொரு அணி அரிமா.அ.செல்வேந்திரன் தலைமையில் மட்டக்களப்பு தாண்டவன்-குளக்கட்டு ஸ்ரீ கண்ணகையம்மன் ஆலயத்திலிருந்து புறப்பட்டு குறிஞ்சாமுனை காளி அம்மன் ஆலய முன்றலில் ஒன்றிணைந்து கன்னன்குடா கண்ணகை அம்மன் ஆலயத்தை அடைந்து பூசையின் பின் விழா மண்டபத்தை அடைந்தது. இதில் கள ஆற்றுகையாக கன்னன்குடா கண்ணகி அம்மன் வசந்தன் கூத்து நடைபெற்றது. இதனை மூ.யோகானந்தராஜா வீ.கனகரட்ணம் இ.சதுஜன் அகியோர் நெறியாழ்கை செய்திருந்தனர்.

 காலை அமர்வு  கூலவாணிகன் சாத்தனார் அரங்கு கண்ணகி இலக்கிய கூடல் துணைத்தலைவர் செல்வி. க.தங்கேஸ்வரி தலைமையில் ஆரம்பமாக இருந்தது. எனினும் அவருக்கேற்பட்ட திடீர் சுகவீனம் காரணமாக விழாக்குழுத் துணைத்  தலைவர் திரு.ஞா.ஸ்ரீநேசன் அவர்களின் தலைமையில் ஆரம்பமானது. 
  முதன்மை அதிதிகளாக  கிழக்கு மாகாண பண்பாட்டு பணிப்பாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெட்ணம், பேராசிரியர் மா.செல்வராசா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். இதில் கண்ணகி இலக்கிய விழாப்பட்டையம் திருமதி சுந்தரமதி வேதநாயகம் அவர்களால் வாசிக்கப்பட்டதுடன்  தொடக்கவுரை கண்ணகி கலை இலக்கியக் கூடலின் தலைவர் செங்கதிரோன் த.கோபாலகிருஸ்ணன் அவர்களாலும் தலைமையுரை விழாக்குழுத் துணைத்தலைவர் திரு.ஞா.ஸ்ரீநேசன் அவர்களாலும் நிகழ்த்தப்பட்டன.  
அதனைத்தொடர்ந்து கண்ணகி கலை இலக்கியக் கூடலில் பொருளாளராகவும் துணைத்தலைவராகவும் இருந்து  செயற்பட்ட அமரர் க. ஆறுமுகம் அவர்களின் நினைவுப் பரல் இடம்பெற்றது இதில் ஆறுமுகம் அவர்களின் உருவப்படத்திற்கு அவரின் மகள் செல்வி ஆறுமுகம் சாகின்யா வினால் பூமாலையும் கவிக்கோ வெல்லவூர்க் கோபால் அவர்களினால் பாமாலையும் கண்ணகி கலை இலக்கியக் கூடல் துணைத்தலைவர் திரு மா.சதாசிவம் அவர்களினால் நினைவுலையும் நிகழ்த்தப்பட்டன.
 இவ் அரங்கில் “கூடல் பரல் - 5” வெளியீட்டுடன்  மற்றும் “சிலப்பதிகாரம் கூறும் உண்மைகள்”, “சிலப்பதிகாரத்தில் சிறப்பான வாழ்வியல் சிந்தனைகள்” , “சிலப்பதிகாரத்தில் சிலையெடுத்த சேரன்” ஆகிய மூன்று நூல்களின் வெளியீடும் இடம்பெற்றது. இதன் வெளியீட்டுரையினை இந்தியா மணிமேகலை பிரசுரம் நிர்வாக இயக்குனர் ரவி தழிழ்வாணன் நிகழ்த்தினார். வெளியீட்டினை கலாநிதி அ.செல்வேந்திரன் நிகழ்த்த நூலின் முதற் பிரதியினை சைவப்புரவலர் திரு. வி. ரஞ்சிதமூர்த்தி பெற்றுக்கொண்டார்.  அதனைத் தொடர்ந்து முதன்மை அதிதிகளின் உரைகள் இடம்பெற்றன. தொடக்கவிழாவின் மற்றொரு அம்சமாக சென்றவருடம் வந்தாறுமூலையில் நடைபெற்ற நிகழ்வின் விபரண ஒளிப்படக்கண்காட்சி ,  நூல்கண்காட்சி , தமிழர் பாரம்பரிய பொருட்கள் கண்காட்சி    ஆகியவற்றுடன் தொடக்கவிழா நிறைவுபெற்றது.  
    இதன் பின்னர் மதிய போசன இடைவேளையைத் தொடர்ந்து முதல்நாள் மாலை அரங்கு பி.ப.3 மணி தொடக்கம் இரவு 8.45 மணிவரை சேரன் செங்குட்டுவன் அரங்கில் நடைபெற்றது.
இதில் முதன்மை அதிதிகளாக மட்டக்களப்பு நீதவான் நீதின்ற நீதிபதி மா.கணேசராஜா, சிவயோகச் செல்வன் த.சாம்பசிவசிவாச்சாரியார், மாகாண வீதிஅபிவிருத்தி திணைக்களப் பணிப்பாளர் ந.மகிந்தா கொழும்புத்தழிழ்ச்சங்கத்தலைவர் சட்டத்தரணி கு.இராஜகுலேந்திரா ஆகியோர் கலந்து கொண்டனர்.
  மாலை அமர்வு கண்ணகி கலை இலக்கிய கூடல் துணைத்தலைவர் செ.எதிர்மன்னசிங்கம் தலைமையில் நடைபெற்றது இங்கு சைவப்புலவர் திருமதி. சிவானந்தஜோதி ஞானசூரியம் அவர்கள் “ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்” தலைப்பில் உரை நிகழ்த்தினார்.  தொடர்ந்து “சிலப்பதிகாரக் காப்பியத்தில் சிறந்த பாத்திரப்படைப்பு” எனும் இலக்கியச் சமர் நடைபெற்றது. இதில் நடுவராக சட்டத்தரணி பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா (அவுஸ்திரேலியா) கலந்து கொள்ள கண்ணகியே என்று சௌந்.லெனாட் லொறொன்ஸோவும் , மாதவியே என கதிரவன் த.இன்பராசாவும் கோவலனே என அகரம் செ.துஜியந்தனும் கவுந்தி அடிகளே என இரா. கலைவேந்தனும் பொற்கொல்லனே என சிவ.வரதகரனும்  பாண்டிய நெடுஞ்செழியனே என ஜீ.எழில்வண்ணணும் சமரிட்டனர். அதன்பின் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய மண்முனைமேற்கு கோட்டப்பாடசாலை மாணவர்களுக்கிடையே நடத்திய பேச்சு, கட்டுரை மற்றும் வில்லுப்பாட்டுப் போட்டிகளில் முதலாம் பரிசுபெற்ற மாணவர்களின் ஆற்றுகைகள் இடம்பெற்றன. 
   தொடர்ந்து நடைபெற்ற மாலை அமர்வில் “கற்பின் கனலி” எனும் சிறப்புச் சொற்பொழிவினை  தமிழருவி த.சிவகுமாரன் நகழ்தினார். அதனைத் தொடர்ந்து  சைவப்புலவர் கலாநிதி சா.தில்லைநாதன் “இளங்கோவடிகளும் மதச்சார்பின்மையும்” தலைப்பிழ் உரைநிகழ்த்தினார்.  இரவு 8.45 மணியளவில் இயல் அரங்கு நிறைவுபெற்றது.