முதல் நாள் காலை அமர்வில் ‘கூலவாணிகன் சாத்தனார்’ அரங்கில் கண்ணகி கலை இலக்கியக் கூடல் தலைவர் செங்கதிரோன் த.கோபாலகிருஸ்ணன் அவர்கள் ஆற்றிய தொடக்கவுரை.

2016 ஜுன் 25,26ம் திகதிகளில் மட்டக்களப்பு மாவட்டம், கன்னன்குடாவில் நடைபெற்ற ஆறாவது கண்ணகி இலக்கிய விழாவான ‘கண்ணகி கலை இலக்கிய விழா -2016’ இன் முதல் நாள் காலை அமர்வில் ‘கூலவாணிகன் சாத்தனார்’ அரங்கில் கண்ணகி கலை இலக்கியக் கூடல் தலைவர் செங்கதிரோன் த.கோபாலகிருஸ்ணன் அவர்கள் ஆற்றிய தொடக்கவுரை.

     இயந்திர நாகரிகத்தால் கற்பழிந்துவிடாத மட்டக்களப்புப் படுவான்கரைப் பிரதேசக் கிராமமான வயலும் வயல் சார்ந்த இடமுமான மருதநில மண் கன்னன்குடாவிலே நடைபெறுகின்ற ஆறாவது கண்ணகி கலை இலக்கிய விழாவான ‘கண்ணகி கலை இலக்கியவிழா -2016’ இன் தொடக்க விழா அரங்கான கூலவாணிகன் சாத்தனார் அரங்கின் தலைவர் அவர்களே!
அரங்கை அணி செய்கின்ற முதன்மை அதிதிகளே! சிறப்பு அதிதிகளே! அரங்கில் நிகழ்ந்த மற்றும் நிகழவிருக்கின்ற நிகழ்வுகளின் ஆற்றுகையாளர்களே! அவையில் நிறைந்திருக்கின்ற கண்ணகி கலை இலக்கிய ஆர்வலர்களே! ஊடகவியலாளர்களே! அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள். 
திருமாமணி நங்கை வந்தாள்! - எங்கள் 
தேசந் தழைத்திட வந்தாள்! வந்தாள்!!
அன்பானவர்களே!
ஒரு தேசிய இனத்தின் அடையாளம் மொழியேயாகும். அம்மொழியின் இருப்பை வெளிப்படுத்துவன அம்மொழியில் எழுந்த கலை இலக்கியங்களே. ஒரு தேசிய இனம் வாழும் போதுதான் அம்மொழியும் அம்மொழியில் எழுந்த கலை இலக்கியங்களும் வாழும்: வளரும். மறுதலையாகக் கலை இலக்கியங்கள் வாழும் போதுதான் அக்கலை இலக்கியங்கள் எழுந்த மொழிக்குரிய தேசிய இனமும் வாழும்:வளரும். எனவே ஒரு தேசிய இனத்தின் இருப்புக்கு அத்தேசிய இனத்தின் மொழியும் அம்மொழியில் எழுந்த கலை இலக்கியங்களும் அக்கலை இலக்கியங்கள் பிரதிபலிக்கின்ற பண்பாட்டு விழுமியங்களும் பேணிப்பாதுகாக்கப் பெற்று வளர்த்தெடுக்கப்பட வேண்டியது அவசியமாகிறது. 

அண்மையில் வெளியிடப்பெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையொன்றில் பன்னாட்டு நிறுவனங்களின் செயற்பாடுகளினால் இன்னும் சிலகாலங்களில் உலகில் இன்று வழக்கிலுள்ள இருப்பதைந்து மொழிகள் காணாமல் போகும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. அதில் தமிழ் எட்டாவது இடத்தில் உள்ளது எனவும் அறியக் கிடக்கிறது. 
ஐக்கியநாடுகள் சபையின் அறிக்கையில் கூறப்பட்ட விடயங்கள் சரியா? பிழையா? அது நடக்குமா? நடக்காதா? என்ற வாதப் பிரதிவாதங்களுக்கு அப்பால் நாம் சிந்திக்க வேண்டிய விடயம் ஒன்றுள்ளது. 
அது என்னவெனில், இன்றைய தமிழ்ச்சூழலில் கைத்தொழிற் புரட்சிகளினால் ஏற்பட்ட இயந்திர நாகரிகம் - நுகர்வுக் கலாசாரம் - திறந்த பொருளாதாரம் - உலகமயமாக்கம் - தகவல் தொழிநுட்பத்தின் அதீத வளர்ச்சி – பல் தேசியக் ‘கொம்பனி’களின் வணிகச் செயற்பாடுகள் போன்ற புறத்தாக்கங்களினால் கற்பழிந்து விடாமல் எமது மொழியையும் அம்மொழியின் முதுசொம்களான கலை இலக்கியங்களையும் பண்பாட்டு விழுமியங்களையும் காப்பாற்றிப் பேண வேண்டிய தேவை இருக்கிறது என்பதுதான்.
நமது கலை இலக்கிய வடிவங்களையும் பண்பாட்டு விழுமியங்களையும் அருகிவிடாமலும் - அழிந்து விடாமலும் பாதுகாப்பது மட்டுமல்ல ‘நவீன மயமாக்கம்’ என்ற போர்வையில் அவை சிதைந்துவிடாமலும் இருக்கவும் சிரத்தை கொள்ள வேண்டியுள்ளது. 
இத்தகைய சிந்தனைப் பின்புலத்திலேதான், மேற்கூறப்பட்ட ஐ.நா அறிக்கை வெளியிடப் பெறுமுன்னரே 2011இலிருந்து கண்ணகி கலை இலக்கிய விழாக்களை வருடம் தோறும் வௌ;வேறு இடங்களில் நடாத்தி வருகிறோம். 
2011இல் மட்டக்களப்பு நகரிலும் - 2012இல் மட்டக்களப்பு மாவட்டம் புதுக்குடியிருப்பிலும் - 2013இல் அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பிலும் - 2014இல் அம்பாறை மாவட்டம் தம்பிலுவிலிலும் - 2015இல் மட்டக்களப்பு மாவட்டம் வந்தாறுமூலையிலும் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக ஆறாவது கண்ணகி கலை இலக்கிய விழா இவ்வருடம் கன்னன்குடாவில் கால் பதித்துள்ளது. 
கண்ணகி கலை இலக்கிய விழாக்களின் பிரதான நோக்கம் தமிழ்ச்சமூகத்தைக் குறிப்பாகக் கிழக்கிலங்கைத் தமிழ்ச்சமூகத்தைச் சாதி, மத, பிரதேச, அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் ஒரு பண்பாட்டுத் தளத்தில் ஒன்றிணைத்து அவர்களைச் சமூக - பொருளாதார -  கல்வி - கலை - இலக்கிய - ஆன்மீக மேம்பாட்டை நோக்கி அறிவு பூர்வமாக ஆற்றுப்படுத்துவதாகும். 
கன்னன்குடா மகாவித்தியாலய கன்னல் கலை அரங்கிலே இவ்வருடக் கண்ணகி கலை இலக்கிய விழா நடைபெறுகின்ற இச்சந்தர்ப்பத்திலே கன்னன்குடா மண்ணின் மைந்தன் அமரர் க. ஆறுமுகம் அவர்களை நினைவு கூருகின்றேன். இன்றைய காலை அமர்வான தொடக்கவிழா நிகழ்ச்சி நிரலில் அன்னாருடைய நினைவுப் பரவல் நிகழ்ச்சியும் இடம்பெற்றுள்ளது. கண்ணகி கலை இலக்கிய விழாவுக்குக் கால்கோள் இட்டவர்களுள் அவரும் ஒருவர். 


கண்ணகி கலை இலக்கிய விழாக்கள் வெறுமனே கூடிக்களிக்கும் அல்லது கூடிக்கலையும் கேளிக்கை நிகழ்வுகள் அல்ல. மக்களுக்கு விழிப்புணர்வூட்டி – மக்களை அறிவூட்டி அவர்களைப் புதிய சிந்தனை வெளிக்கு இட்டுச் செல்லும் ஓர் சமூக அசைவியக்கமாகவே கண்ணகி கலை இலக்கிய விழாக்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன. 
எதிர்காலத்தில் விழாக்களோடு மட்டும் நின்று விடாமல் - கலை இலக்கியச் செயற்பாடுகளோடு மட்டும் எம்மைக் கட்டுப்படுத்தாமல் சமுக - பொருளாதார -  கல்வி - சூழல் பாதுகாப்பு மற்றும் – வாழ்வாதார மேம்பாட்டுச் செயற்பாடுகளையும் முன்னெடுக்க நாம்  எண்ணம் கொண்டுள்ளோம். கண்ணகி கலை இலக்கியக் கூடலை ஒரு பாரிய பண்பாட்டு நிறுவனமாகக் கட்டியெழுப்பி அதனூடாகவே மேற்கூறப்பட்ட செயற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளோம். 
எதிர்காலத்தில் எமது செயற்பாட்டுடன் இணைந்துகொள்ளும் படி இங்குள்ள அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். ஒன்றிணைந்த கூட்டுச் செயற்பாடுகள் மூலமே எமது சமூகத்தை உயர்வடையச் செய்ய முடியும். பிரிவினைகளும், பேதங்களும், தற்பெருமைகளும், தன்னலம் மட்டுமே கருதும் தன்னிச்சையான செயற்பாடுகளுமே எம்மைப் பின்தள்ளும் காரணிகளாகும். இன்றைய தமிழ்ச்சூழலின் அவசரத் தேவை உணர்ச்சியைக் குறைத்து உண்மையைத் தேடுவதேயாகும். 
பாண்டியன் நெடுஞ்செழியன் உண்மையைத் தேடாது உணர்ச்சிக் கொந்தளிப்பில் நிரபராதி ஆன கோவலனைக் கள்வன் என்று அவசரப்பட்டுத் தவறான முடிவை மேற்கொண்டதாலேயே அவனுடைய அரசு நீதி வழுவவும் - அதன் விளைவாக அவனும் அவனுடைய மனைவியும் உயிர் துறக்கவும் - இறுதியில் மதுரை மாநகரம் எரியவும் ஆன அழிவு ஏற்பட்டது. இது சிலப்பதிகாரம் நமக்குத் தருகின்ற செய்திகளில் ஒன்று. அதனால்தான் உணர்ச்சியைக் குறைத்து உண்மையைத் தேடுங்கள் என்றேன்.
அன்பானவர்களே!
கலை இலக்கியங்களினூடாக சமூக மாற்றத்தையும் மறுமலர்ச்சியையும் ஏற்படுத்துவோம்!
கலை இலக்கியங்களினூடாக மனித மனங்களைச் செழுமைப்படுத்தி மனித உறவுகளையும் மனித விழுமியங்களையும் கட்டியெழுப்புவோம்!
கலை இலக்கியங்களினூடாகப் பொருளாதாரவளங்களை மேம்படுத்துவோம்! 
கலை இலக்கியங்களினூடாக ஆன்மீக எழுச்சியை ஏற்படுத்துவோம்!
கலை இலக்கியங்களினூடாக இயற்கை அனர்த்தங்களினாலும் யுத்தக் கொடுமைகளினாலும் ஏற்பட்ட அவலங்களினால் நொந்து போயுள்ள மனித மனங்களை ஆசுவாசப்படுத்துவோம்! 
கலை இலக்கியங்களினூடாகப் பண்பாட்டுத்தளமொன்றில் ஒன்றிணைவோம்!
கலை இலக்கியங்களினூடாக அறிவார்ந்த சமூகமொன்றை நிர்மாணம் செய்வோம்;!
இப்பாரிய பணிகளையெல்லாம் மேற்கொள்ள ‘கண்ணகி கலை இலக்கியக்கூடல்’ காத்திருக்கிறது. மனித வளம் எம்மிடம் உண்டு. பொருள் வளப் பற்றாக்குறையே எம்முன்னால் உள்ள சவால். இங்கு கூடியுள்ள அனைவரிடமும் ஓர் அன்பான வேண்டுகோள். எம்மால் திட்டமிடப்பட்டுள்ள பணிகளை எதிர்காலத்தில் முன்னெடுக்க எமக்குக் கை கொடுங்கள். நிதி மிகுந்தவர் பொற்குவை தந்தும் - நிதி குறைந்தவர் காசுகள் தந்தும் - ஆண்மையாளர் உழைப்பினை நல்கியும் - அதுவுமற்றவர் வாய்ச்சொல் அருளியும் இப்பெருந்தொழில் நாட்டுவம் வாரீர்!
நிறைவாக இவ்விழாவினை இத்தனை சிறப்புறக் கட்டமைத்த விழாக்குழுவின் தலைவர், செயலாளர் உட்பட்ட அனைத்து விழாக்குழு மற்றும் உபகுழு உறுப்பினர்களுக்கும் குறிப்பாக இவ்விழாவின் நெம்புகோலாக நின்று சுழன்று பணியாற்றும் விழாக்குழுப் பொருளாளர் தம்பி சசிகுமார் மற்றும் விழா அரங்குகளைச் சிறப்பாக ஒழுங்கமைத்து ‘சொல்லாமலே பெரியர்’ ஆகச் செயற்படும் கன்னன்குடா மகாவித்தியாலய அதிபர் புலேந்திரகுமார் ஆகியோருக்கும் விழாச் செலவுகளைத் தாங்கி நிற்கும் அனுசரணையாளர்களுக்கும் பேராளர்களுக்கும் குறிப்பாக ‘கூடல்’ பரல் - 5  விழாமலரின் அனுசரணையாளர்களான ஞா.ஸ்ரீநேசன் மற்றும் கிரிதரன் ஆகியோருக்கும் விருந்தோம்பல் பொறுப்பை ஏற்று விழாவைச் சிறப்பித்துள்ள ஈச்சன்தீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் மற்றும் மற்றும் கன்னன்குடா கண்ணகி அம்மன் ஆலய நிர்வாகத்தினருக்கும் கண்ணகி கலை இலக்கியக்கூடல் தாய்ச்சங்கத்தின் சார்பில் நன்றிகள். இவ்விழா சிறப்புறப் பங்களிப்புக்களை நல்கிய மட்டக்களப்புப் படுவான்கரைப் பிரதேசக் குறிப்பாக மண்முனை மேற்குப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஊர் மக்களின் உழைப்புக்கும் ஒத்தாசைக்கும் தலை வணங்கி எனது தொடக்கவுரையை நிறைவு செய்கின்றேன். நன்றி. வணக்கம்.