க.இரகுபரன்,
சிரேஷ்ட விரிவுரையாளர்,
மொழித்துறை, தென்கிழக்குப் பல்கலைக்கழகம்.


இலக்கியமானது படைப்பாற்றல் உள்ள தனிமனிதர்களாற் படைக்கப்படுவதாயினும் அடிப்படையில் அது ஓர் சமூக சாதனமாகும். அது காரணமாக ஆற்றல் மிக்க படைப்பாளி ஒருவன் சமகால சமூகத்துக்காகத் தான் படைக்கும் இலக்கியத்துக்கு வேண்டிய அடிப்படைகள் பலவற்றையும் சமகாலத்திலிருந்து மாத்திரமல்லாமல் தன் சமூகத்தோடு ஆழமாக வேருன்றிவிட்ட பண்பாட்டுப் பாரம்பரியங்களில் இருந்தும் எடுத்துக்கொள்கின்றான். சிறந்த படைப்பாளிக்குரிய இப் பொதுஇயல்பு காரணமாக அடுத்த காலகட்டத்தில் வரும் படைப்பாளிகள் வேண்டிநிற்கும் அடிப்படைகள் பலவற்றை வழங்கக்கூடிய வளம் உள்ளவனாகவும் இன்றியமையாதவனாகவும் அப்படைப்பாளி விளங்குவான். ''இலக்கியம் என்பது காலத்தின் உற்பத்தி, அதே நேரத்தில் அது காலத்தையும் உற்பவிக்கின்றது' ''இலக்கியத்தின் சர்வமுக்கியத்துவமுடைய பண்பு அது கடந்த காலத்தின் உற்பத்திப் பொருள் என்பது மாத்திரமன்று; அதற்கு ஒரு
நிகழ்கால இயைபும் உண்டு என்பதுமே' என்றும் இலக்கிய வரலாற்றாசிரியர்கள் கூறுவது இந்த உண்மையின் அடிப்படையிலேயே.

     இளங்கோ தமிழில் ஆற்றல் மிக்க படைப்பாளிகளில் ஒருவர். தமிழிலக்கிய வரலாற்றின் திருப்பு மையங்களாய் அமைபவர்களுள் முதல்வர். அவரும் இப்போது விதிக்குட்பட்டவராய் 'கொண்டும் கொடுத்தும்' தமிழிலக்கிய உலகுக்கு ஆட்செய்த அடிகளே. சிலப்பதிகாரம் தமிழின் பெருங் காப்பியங்களுள் ஒன்றாகப் பேசப்படுவது. காப்பியம் காவ்ய என்ற வடசொல்லின் திரிபு என்பது அறிஞர் கருத்து. காவியங்களை ஆதிகாவியம் (முன்னிலைக் காப்பியம் - Pசiஅவைiஎந நுpiஉ), அநந்தர காவியம் (ளுநஉழனெயசல நிiஉ - சார்பு நிலைக் காப்பியம்) என இரண்டாக வகையீடு செய்யும் வழக்கம் உண்டு. ஆதிகாலத்திலிருந்தே மக்களிடையே வழங்கிவருவதும், காவியம் பற்றிய கலைக்கோட்பாடுகள் வளராத காலத்திலே இயற்கையாகவே தோற்றம் பெறுவதும் பல கதைக் கூறுகளும், மரபுகளும் பல பிரதேசங்களில் வழங்கி வந்து அவையெல்லாம் ஒன்று திரண்டு உருப்பெற்று வளர்வதுமாகிய இயல்புகள் ஆதிகாவிய வகைக்குரியவையாகவும் சமூக இலக்கிய வரலாற்றிலே பிற்பட்ட காலகட்டங்களிலே தோற்றம் பெறுதலும் காவியம் பற்றிய கலைக்கோட்பாடுகள் வளர்ச்சிகண்டு நிலைபேறுற்று விட்ட நிலையிலே தோற்றம் பெறுவதும் கவிஞனொருவனால் இயற்றப்பட்டதென்ற
உண்மை தெரியக்கூடியதாக இருத்தலுமாகிய இயல்புகள் அநந்தர காவியங்களின் இயல்புகளாகவும் கொள்ளப்படுவன.
ஆராய்ந்து பார்க்கின்றபோது சிலப்பதிகாரத்தில் இந்த இரு தன்மைகளும் இருக்கக் காணலாம். சிலப்பதிகாரக் காவியம் காலங்காலமாக தமிழ்நாட்டு மக்கள் மத்தியிலே வழங்கி வந்த கதைக்கூறுகளின் அடிப்படையிலே கட்டியெழுப்பப் பட்டதென்பது அறிஞர்களுடைய கருத்து. கோவலன் என்பான் தன் மனைவியாகிய கண்ணகியைத் துறந்து கணிகையர் குலத்தவளான வேறொருத்தியோடு கூடிவாழ்ந்தான் என்பதும் கண்ணகி தன் கணவன் கொலையுண்டு இறக்க அவனது பிரிவுக்கு ஆற்றாதவளாய் தனது முலையொன்றைத் திருகியெறிந்தாள் என்பதும் சிலப்பதிகாரக் காவியக் கதையின் இருவேறு சம்பவக் கூறுகள். இவை இரண்டும் நெடுங்காலமாகவே
தமிழகத்தில் வழங்கி வந்தவை என்பதற்குச் சான்றாக முறையே புறம் - 144, நற்றிணை - 216 செய்யுள்களை அறிஞர் பலரும் எடுத்துக் காட்டியுள்ளனர்.
இவற்றுள் நற்றிணைச் செய்யுளுக்கு எழுதப்பட்டுள்ள துறைக்குறிப்பு வருமாறு. ''இது தலைமகட்குப் பாங்காயினார் கேட்பத் தலைமகன் தலைநின்றொழுகப்படா நின்ற பரத்தை பாணற்காயினும் விறலிக்காயினும்
சொல்லுவாளாய்ச் சொல்லியது' அதாவது நாயகனால் துறக்கப்பட்ட நிலையில் துன்புற்ற காதற்பரத்தையானவள் தனது துன்ப நிலையில்
தனக்கு ஆறுல் கூறிய பாணன், விறலியர்களை நோக்கிச் சொல்வதாக அமைந்தது இப்பாடல். இவ்வூர்ச்சேரி எனக்கு இனியவர்களாயும் என் துயரைக் கேட்டு இரங்குபவர்களாயுமுள்ள நும்போன்ற மக்களை உடையதாயினும் என்
அன்புக்குரியவரும் துன்பங்களைய வல்லவருமான தலைவரைக் காணமுடியாத நிலையிலே இருந்ததால் இந்த இடம் எனக்கு வெறுப்புக்குரியதே' என்று கூறும் காதற் பரத்தை தன்னைப் போலவே தலைவனது பிரிவினால் வருந்திய பெண்ணொருத்தியின் துயர நிலையை எடுத்துக் கூறுகின்றாள். அப்பெண் ஏதிலாளன் ஒருவனால் பெரும் துயருக்கு ஆளாகித் தன் ஒரு முலையை அறுத்தாள் என்றும் அவள் வேங்கை மரத்தருகே உள்ள ஒரு பரணிலே வந்து நின்றாள்

என்றும் அங்கு வந்த மக்கள் சிலர் அவள் நிலை கண்டு துக்கம் விசாரித்தனர் என்றும் அப்படித் துக்கம் விசாரித்தவர்கள்
நல்லவர்களே ஆயினும் தன் அன்புக் கணவனைப் பிரிந்த பெருந்துயர் வாட்டுதலால் அந்நிலையில் அவர்கள் எல்லாம்
அவளது வெறுப்புக்கே உரியராயினர் என்பதும் அப்பரத்தையாற் கூறப்படும் விடயங்கள்.
துனிநீர் கூட்டமொரு துன்னா ராயினும்
இனிதே காணநர்க் காண்புழி வாழ்தல்
கண்ணுறு விழுமம் கைபோல் உதவி
நம்முறு துயரம் களையா ராயினும்
இன்னா தன்றே அவரின் ஊரே
எரிமருள் வேங்கைக் கடவுள் காக்கும்
குருகார் கழனியின் இதணத் தாங்கண்
ஏதி லாளன் கவலை கவற்ற
ஒரு முலை யறுத்த திருமா வுண்ணிக்
கேட்டோ ரெனைய ராயினும்
இப்பாட்டு ஒரு காதற்பரத்தையின் கூற்றாய் அமைவது கண்டோம். இக்காதற் பரத்தையே மாதவியாகவும்
அவளால் சுட்டப்பட்ட திருமாவுண்ணியே கண்ணகியாகவும் சிலப்பதிகாரத்தில் வளர்த்தெடுக்கப்பட்டார்கள். முன்னவள்
காதற் பரத்தையாக இருப்பதும் அவள் தன் நாயகனைக் காணமுடியாத நிலைமை உற்றதும் அந்நிலையில்
அவளுக்குண்டான உலக வெறுப்பும் முறையே மாதவியின் குலத்தையும் அவளது நாயகனாகிய கோவலனது பிரிவையும்
அது காரணமாக அவள் மேற்கொண்ட துறவையும் நினைவூட்டுவனவாக விளங்குகின்றன. அதுபோலவே திருமாவுண்ணி
ஏதிலாளொருவனால் பெரும் துயருக்கு ஆளாகி தன் முலையொன்றை அறுத்ததும் சுற்றத்தின் மேல் அவளுக்குண்டான
வெறுப்பும் வேங்கை மரத்தின் கீழ் நின்றதுமெல்லாம் கண்ணகியை நினைவூட்டுவன.
மலைவேங்கை நறுநிழலின் வள்ளிபோல்வீர் மனநடுங்க
முலையிழந்து வந்து நின்றீர் யாவிரோ
என்னும் 'குன்றக்குரவை' அடிகள் கண்ணகி முலையிழந்து நின்றதையும் வேங்கை மரத்தடியில் நின்றதையும்
உணர்வதோடு சுற்றத்தாரின் உசாவலையும் உணர்த்தி நிற்பது கவனிக்கத் தக்கது.
இவ்விடத்தில் அறிஞர்.மு.இராகவையங்கார் குறிப்பிடும் விடயம் ஒன்று கருத்தக்கது. அவ்விடயம் கண்ணகி
எனும் பெயர் சம்பந்தமானது. கண்ணகி காது வழியாக அதாவது கர்ணம் வழியாகப் பிறந்தவள். அதனால் கர்ணகா
அல்லது கர்ணிகா என்பதினின்றே கண்ணகி என்ற பெயர் உண்டாயிற்று என்பது 'கோவலன் கதை' கூறும் செய்தி.
ஐந்துதலை நாகமது அந்தக் குழந்தை தன்னை
காளியென்று தானறிந்து கனமாக ஏதுசெய்யும்
கன்னவழியாய்ப் பிறந்த கட்டழகி யாகுமெனக்
கண்ணகியா ளென்று சொல்லிக் கன்னிக்குப் பேர்கொடுத்து
மு. இராகவையங்கார் அதனை மறுத்து தாமரைப் பொகுட்டைக் குறிக்கும் கர்ணக அல்லது கர்ணிக
என்பதிலிருந்தே கண்ணகி என்ற பெயர் உண்டாயிற்று என்கிறார். தாமரைப் பொகுட்டை கொட்டை என்றும் மணி என்றும்
கூறும் வழக்கம் உண்டென்றும் அவற்றுள் ஒன்றான மணி என்ற குறிப்புப் பெயரால் இளங்கோவும் கண்ணகியைச்
சுட்டியிருக்கின்றார் என்றும் இராகவையங்கார் கூறுவார்.
ஒரு மாமணியாய் உலகுக்கோங்கிய
திருமாமணி (வேட்டுவவரி)
உம்மைப் பயன்கொல் ஒருதனி உழந்து இத்
திருத்தகு மாமணிக் கொழுந்துடன் போத்தது
இங்கு திருமாமணி என்பது திருமகள் விரும்பியுறையும் மணிதாமரைப் பொகுட்டு எனப் பொருள்படும். என்றும்
அது கர்ணக என்பதன் பரியாய நாமம் என்றும் கர்ணக என்பதிலிருந்து கண்ணகி என்ற பெயர் வந்ததிருக்க வேண்டும்
என்றும் அதனால் மேற்படி நற்றிணைச் செய்யுளில் திருமாவுண்ணி என்று உள்ளது திருமாமணி என்பதன் திரிபாதல்
வேண்டும் என்றும் கூறுவார் இராகவையங்கார்.
அது அவ்வாறாகக் கண்ணகி என்ற பெயர் புறநானூற்றுப் பாடல் ஒன்றின் அடிக்குறிப்பிற் காணப்படுகின்றது.
வையாவிக் கோப்பெரும்பேகன் என்ற வள்ளல் தன் மனைவியை மறந்து வேறொருத்தியுடன் வாழ்ந்துவந்ததால் அவன்
மனைவி வாடி வருந்தியதைக் கண்டு மனம் பொறாத புலவர்கள் அவளுக்காக முறையிடுவதாக அமைந்த ஐந்து
பாடல்களின் ஒன்றின் அடிக்குறிப்பாகவே மேற்படி செய்தி வருகின்றது. பேகன் ஒரு வள்ளல் என்பதும் அவன் தனது
மனைவியைத் துறந்து வேறொருத்தியுடன் இன்பம்துய்ந்து வாழ்ந்தான் என்பதும் அவனது மனைவி பெயர் கண்ணகி
என்பதும் ஈண்டு கவனிக்கத்தக்கன. சிலப்பதிகார ஆசிரியர் கூட கோவலனை ஒரு வள்ளலாகவே சித்திரிக்க முனைவதும்
கருதத்தக்கது.மேற்படி நற்றிணை புறநானூற்றுச் செய்யுள்களுக்குப் புறம்பாக யாப்பருங்கல விருத்தியுரையில்
ஆரிடப்போலிக்கு உதாரணமாக காட்டிய செய்யுளொன்றிலும் சிலப்பதிகாரக் கதைக்குறிப்புக் காணப்படுகின்றது.
அவ்விருத்தியுரை அதனைப் 'பத்தினிச் செய்யுள்' என்றே குறிப்பிடுகின்றது.
கண்டகம் பற்றிக் கடக மணிதுளங்க
ஒண்செங் குருதியி னோடு கிடந்ததே - கெண்டிக்
கெழுதகை யில்லேன் கிடந்தூடப் பன்னாள்
அழுதகண் ணீர்துடைத்த கை.
இச் செய்யுள் தன் கணவன் வெட்டுண்டு வீழ்ந்து கிடந்த நிலை கண்டு புலம்பிய ஒருத்தியின் கூற்றாய் அமைதல்
காண்க. இச் செய்யுளில் அவள் தனது கணவனின் பிரிவால் நெடுங்காலம் வருந்தியமையும் ஈற்றில் அவன் அவளது
கண்ணீரை மாற்றியதும் குறிப்பிடப் பெறுகின்றன. இத்தகைய வாழ்க்கைக் குறிப்பாலும் இச்செய்யுள் பத்தினிச் செய்யுள்
எனக் குறிக்கப்படுவதாலும் இது கண்ணகியோடு தொடர்புடையதே என்று கொள்ளக்கூடியதாகின்றது.
சிலப்பதிகாரத்திலும் கோவலன் வெட்டுண்டு கிடக்கக் கண்ணகி அதுகண்டு புலம்பும் புலம்பலில் இச் செய்யுளின் சாயல்
புலப்படுவதை அவதானிக்கலாம்.
கண்பொழி புனல்சோர கடுவினை உடையேன் முன்
புண்பொழி குருதியிராய்ப் பொடியாடிக் கிடப்பதோ
'இப்பத்தினிச் செய்யுளின் இரண்டாமடி வெண்பாவுக்கோதிய உறுப்பின் மிக்கு ஐஞ்சீர் பெற்று
வந்தமையால் ஆரிடப் போலியாம் என்றும் ஆரிடம் பாடற்குரியார் ஆக்குதற்கும்கெடுத்தற்கும்
ஆற்றலுடையோராய் இம்மை மறுமை முக்காலமுணர்ந்த இருடிகளென்றும் ஆரிடப் போலி
பாடற்குரியார் இருடிகளல்லா ஏனையோராகி மனத்தது பாடவும் ஆகவும் கெடவும் பாடல்
தரும் கபிலபரணராதியோர் எனவும் இப்பத்தினியும் அவருள் ஒருவர் எனவும்
அவ்விருத்தியுடையோர் எழுதியவை புதிய தமிழ்ச் செய்திகளாகும்'
என்பார் மு.இராகவையங்காரரவர்கள். விருத்தியுரைகாரர் ஆரிடப்போலி பாடற்குரியார் ஆக்கவும் கெடவும்
பாடத்தக்கவருள்ள ஒருவராக மேற்படி பத்தினியைக் குறிப்பிட்டதும் சிலப்பதிகாரக் கண்ணகி தன் வார்த்தையால்
மதுரையை அழித்ததும் இங்கு கருத்தக்கன.
மேற்படி பத்தினிச் செய்யுளை நோக்கிய வையாபுரிப்பிள்ளை, இளங்கோ சிலப்பதிகாரத்தைப் பாடுவதற்கு
முன்பே கண்ணகி பற்றிய வரலாறு ஓரளவு பூரண வடிவினை எய்திவிட்டது என்ற முடிவுக்கு வருகிறார் என்பதும் இங்கு
குறிப்பிடப்பட வேண்டியதே.
சிலப்பதிகாரத்துக்குச் சமாந்தரமாக வேறும் பல கண்ணகி கதைகள் வழங்கின என்பது மறுக்க முடியாத
உண்மையாகும். சிலப்பதிகார ஆசிரியரான இளங்கோ தன்கதைகளுக்கான அடிக்கருத்துக்களைத் தமக்கு முற்பட்ட
நூல்களிலிருந்தும் உலக வழக்காறுகளிலிருந்தும் பெற்றுக் கொண்டார் என்ற உண்மை இங்கு வலியுறுத்தப்பட்டது.
சிலப்பதிகார ஆசிரியராகிய இளங்கோவின் சமயம் எது என்பது பற்றிய சர்ச்சை இருக்கும் அளவுக்கு அவரது
காப்பியப் பாத்திரங்களின் சமயம் எது என்பதில் சர்ச்சை இல்லை. பல பாத்திரங்கள் தெட்டத்தெளிவாக இன்ன சமயத்தன
என்பது இளங்கோவடிகளால் உணர்த்தப்படுகின்றது. இளங்கோவடிகளால் சாவக நோன்பிகளாகச் சுட்டப்படுதலால்
கோவலனும் கண்ணகியும் சமண சமயத்தைச் சார்ந்தவர்கள் என்பதே பெரும்பாலான அறிஞர்களின் முடிவு. ஆனால்
'கோவலன் கதை', 'கண்ணகி வழக்குரை' என்பவற்றில் கோவலனும் கண்ணகியும் சைவராக மாற்றம்
பெற்றுவிடுகின்றார்கள். இம்மாற்றம் சுயாதீனமாக நிகழ்ந்த தொன்று. அதற்கான அடிப்படையை இளங்கோவடிகளே
கொடுத்திருக்கின்றார் என்று கொள்ளக்கூடியதாக இருக்கின்றது.
காப்பியத் தொடக்கத்தில் கண்ணகியை அறிமுகப்படுத்தும்போதே இந்துசமயச் சார்போடே அறிமுகப்படுத்துகின்றார்.
................................................
அவளுந்தான்,
போதிலார் திருவினாள் புகழுடை வடிவென்றும்
தீதிலா வடமீனின் திறம் இவள் திறம் என்றும்
மாதரார் தொழுதேத்த வயங்கிய பெருங்குணத்துக்
காதலாள் ...........................................................
கோவலன் பற்றிய அறிமுகமும் அவ்வாறே அமைகிறது.
.................................................................................
அவனுந்தான்
மண்தேய்த்த புகழினான் மதிமுக மடவார்தம்
பண்தேய்த்த மொழியினார் ஆயத்துப் பாராட்டிக்
கண்டேத்தும் செவ்வேள் என்று இசைபோக்கி காதலாற்
கொண்டேத்தும் கிழமையான் கோவலன்
இருவரும் மனையறம் படுத்தகாலை பள்ளியறையில் கண்ணகிமேற் தீராக் காதலனாய் அவள் திருமுகம்
நோக்கிக் கோவலன் குறியாக் கட்டுரையாய்க் கூறும் வருணனைகளையும் இளங்கோ இந்துமதச் சார்புடையனவாகவே
படைத்தார்.
...........................................................................
குழவித் திங்கள் இமையவர் ஏத்த
அழகொடுமுடித்த அருமைத்து ஆயினும்
உரிது நின்னோடு உடன்பிறப்பு உண்மையின்
பெரியோன் தருக திருநுதல் ஆகென
அடையார் முனையகத்து அமரமேம் படுநர்க்கு
படைவழங்குவதோர் பண்புண்டாகலின்
உருவிலாளன் ஒரு பெருங் கருப்புவில்
இரு கரும் புருவமாக வீர்க்க
மூவா மருந்தின் முன்னர்த் தோன்றலின்
தேவர் கோமன் தெய்வக் காவற்
படை நினக்கு அளிக்க அதன் இடைநினக்கு இடைஎன
அறு முக ஒருவன் ஓர் பெறுமுறை இன்றியும்
இறுமுறை காணும் இயல்பினில் அன்றே
அஞ்சுடர் நெடுவில் ஒன்று நின் முகத்துச்
செங்கடை மழைக்கண் இரண்டா ஈத்தது
......................................................................
கோவலனை அநீதியாகக் கொன்ற பாண்டியனிடம் நீதி கேட்க வாயில் வந்து நின்ற கண்ணகியின் வரவைப்
பாண்டியனிடம் எடுத்துரைக்கும் வாயிற்காவலனின் வியப்புரையிலும் இளங்கோ கண்ணகியின் தெய்வத் தன்மையை
வைதீகச் சார்புடனேயே உணர்த்தினார்.
அடர்ந்தெழு குருதி அடங்காப் பசுந்துணிப்
பிடர்த்தலைப் பீடம் ஏறிய மடக்கொடி
வெற்றிவேற் றடக்கைக் கொற்றவையல்லள்
அறுவர்க்கிளைய நங்கை இறைவனை
ஆடல் கொண்டருளிய அணங்கு குருடைக்
கானகம் உகந்த காளி தாருகன்
பேருரம் கிழித்த பெண்ணும் அல்லள்
செற்றனள் போலும் செயிர்த்தனள் போலும்
.........................................................................
இது முன்னையவற்றிலும் அதிக தாக்கமானது எனலாம். எல்லாவற்றிலும் மேலாக அழற் படுகாதையின் இறுதி வெண்பா,
மாமகளும் நாமகளும் மாமயிடற் செற்றுகந்த
கோமகளும் தாம்படைத்த கொற்றத்தாள் - நாம
முதிரா முலைகுறைத்தாள் முன்னலே வந்தாள்
மதுரா பதியென்னும் மாது.
என்று தேவியர் மூவரது கொற்றத்தையும் தன் கொற்றமாக உற்றவளாகக் கண்ணகியைக் காட்டுகின்றது.
அரும்பத உரையாசிரியரும்,
மேற்பட்டு இவளைத் தெய்வமாகக் கொண்டாடுமிடம்
கூறினபடியாலே இவள் துர்க்கையாகவே பிறந்தாள் என்று என எழுதி வைத்தார். பிற்காலத்துத் தோன்றிய சைவ எழுச்சி
மாத்திரமின்றி சிலப்பதிகாரம் கொடுத்த இத்தகு அடிக்கருத்துக்களும் சேர்ந்தே நாட்டார் மரபு சார்ந்த கண்ணகி கதைகள்
சைவச் சார்புடையனாவதற்கு அடித்தளம் இட்டன எனலாம்.
சிலப்பதிகாரப் பாவிகங்களுள் ஒன்று ''உரைசலால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்' என்பதாகும். பத்தினிப்
பெண்களின் இயல்புகளைத் திருக்குறள் பலவாறாகக் கூறியது. ஒருகுறள்,
தெய்வம் தொழாஅள் கொழுநற் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை

என்பதாகும். இக்குறட் சிந்தனையைச ; சிலப்பதிகாரக் கதையோட்டத்தில் அமைத்திருக்கின்றார் இளங்கோ. கண்ணகி
கணவனைப் பிரிந்து வருந்தியிருந்த காலத்திற் தேவந்தி என்பாள் வந்து பிரிந்த கணவனைச் சேருதற்கு உபாயமாக
கண்ணகியிடம்,
சோமகுண்டஞ் சூரிய குண்டம் துறைமூழ்கி
காமவேள் கோட்டம் தொழுதார் கணவரொடு
தாமின்புறுவர் உலகத்துத் தையலார்
போகஞ் செய் பூமியினும் போய்ப் பிறப்பர் யாம் ஒரு நாள்
ஆடுதும்
என்று கூறினாள். அதற்குக் கண்ணகி ''பீடு அன்று' எனத் தெய்வம் தொழ மறுத்தாள். கண்ணகி ''பீடன்று' என்று வாய்மூடு
முன்னரே கோவலனும் வந்து சேர்ந்ததாக இளங்கோ காட்டுகின்றார். இவ்வாறு கண்ணகி தெய்வம் தொழாதவள்
என்பதைக் காட்டும் இளங்கோ அவள் தன் கணவனைத் தொழும் பாங்கையும் காட்டுகின்றார். மதுரைப் புறஞ்சேரியில்
மாதரி வீட்டில் சமையலை முடித்துவிட்டு கணவனை உணவருந்த அழைத்த முறைமையில் இளங்கோ அதனைக்
காட்டினார்.
கடிமலர் அங்கையின் காதலன் அடிநீர்
சுடுமண் மண்டையின் தொழுதனள் மாற்றி
இவ்வாறு தெய்வம் தொழாது கொண்ட கொழுநனையே தொழும் கற்புடைப் பெண்டிர் ''பெய்யென மழை பெய்யும்'
என்றார் வள்ளுவர். இங்கு மழைபெய்யும் என்றது இயற்கையும் கற்புடைப் பெண்டிரின் ஏவல் கேட்கும் என்பதற்கான
குறியீடே. கோவலன் கள்வனெனக் குற்றஞ் சாட்டப்பட்டுக் கொலையுண்டமை கேட்டுக் கொதித்த கண்ணகி ''காய்கதிர்
செல்வனே கள்வனோ என்கணவன்' எனக் கேட்கச் சூரியனும், ''கள்வன் அல்லன்' என விடையிறுத்ததாகக்
காட்டுகின்றார் இளங்கோ. நீதி தவறிய பாண்டியனின் மதுரையைக் கண்ணகி எரிக்க முனைந்தபோது தீக்கடவுளே வந்து
அவள் ஏவல் கேட்டதாகக் கதை அமைக்கப்படுகின்றது.