தமிழ் மண்ணோடும் தமிழ் மரபோடும் இணைந்த கதை கண்ணகி கதை. அவளின் திண்மையும், தீரமும் நிறைந்த வாழ்வும், மக்கள் நலன் நாட்டமும் அவளை மக்களின் தெய்வமாக்கின. சோழ நாட்டில் பிறந்து, பாண்டிய நாட்டிலே வழக்குரைத்து, சேர நாட்டில் தெய்வீகமான கண்ணகி, ஈழ நாட்டில் சிங்கள தமிழ் மக்களின் மத்தியில் வழிபாட்டிற்குரிய தெய்வமானாள்.
             பின்னாளில் கண்ணகி 'கண்ணகையம்மன்' என கிழக்கிலங்கையில் நிலைபெற்று விடுவதுடன், கிழக்கிலங்கையின் பண்பாட்டு அடையாளங்களுள் ஒன்றாகவும் ஆகிவிடுகின்றாள். கிழக்கிலங்கையில் வைகாசித் திங்கள் அவளுக்குரியதாகும். இதன்போது கிழக்கிலங்கை விழாக்கோலம் பூணும். 
   மக்கள் தெய்வமான கண்ணகியின் கதை சிலப்பதிகாரம், சிலம்பு கூறல், கண்ணகி காவியம், கண்ணகி வழக்குரை, குளுத்திப் பாடல், கண்ணகையம்மன் நாடகம், கண்ணகி வசந்தன், கும்மி, கரகம், காவடி, கொம்பு முறிப்பு, குரவைக் கூத்து என தமிழில் கண்ணகி கலை, இலக்கியமாக விரிந்துள்ளது. கண்ணகிக்குரித்தான வைகாசி மாதத்தில் அவளை நினைவுகூரவும், அவளது இலக்கியங்களைப் பரவலாக்கவுமான நோக்குடன் கண்ணகி இலக்கிய விழா 2011.06.18 அன்று எம்மால் தொடக்கி வைக்கப்படுகின்றது.
     இவ்விழா எதிர்காலத்தில் வருடம் தோறும் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்லப்படும் எனவும் இத்தால் பிரகடனப்படுத்தப்படுகின்றது. இப் பட்டயம் கண்ணகி இலக்கிய விழாக் குழுவினரால் 2011.06.18ம் திகதி நடைபெற்ற 'கண்ணகி இலக்கிய விழா 2011' இன் தொடக்க விழாவில் காரைதீவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அதிபர் திருமதி கோமேதகவல்லி செல்லத்துரை அவர்களால் பிரகடனப்படுத்தப்பட்டு, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.சுந்தரம் அருமைநாயகம் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.