திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவில் தம்பிலுவில் கிராமத்தில் 2014 ஆகஸ்ட் 1ம் ,2ம் ,3ம் திகதிகளில் நடைபெற்ற நான்காவது கண்ணகி கலை இலக்கிய விழாவான 'கண்ணகி கலை இலக்கிய விழா 2014' இன் 1ம் நாள் நிகழ்வின் காலை அமர்;வான 'கூலவாணிகன் சாத்தனார்' அரங்கில் நடைபெற்ற தொடக்கவிழாவில் கண்ணகி கலை இலக்கிய கூடலின் தலைவர் செங்கதிரோன் த.கோபாலகிருஸ்ணன் ஆற்றிய தொடக்கவுரை.
2011ம் ஆண்டில் மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரியின் கலையரங்கிலே நடைபெற்ற முதலாவது கண்ணகி கலை இலக்கிய விழாவினைத் தொடர்ந்து 2012 இல் மட்டக்களப்பு புதுக்குடியிருப்பிலும், 2013 இலே ஆலையடிவேம்பு பிரதேசசபை கலாசார மண்டபத்தில் அக்கரைப்பற்றிலும் நடைபெற்று நான்காவது விழா இன்று தம்பிலுவில் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய கண்ணகி கலை அரங்கிலே நடைபெறத் தொடங்கியுள்ளதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.
அன்பானவர்களே ! ஒரு சமூகத்தின் இருப்பிற்கும் அடையாளத்திற்கும் மொழியும் நிலமும் எவ்வாறு முக்கியமோ அதே போன்றுதான் அச்சமூகத்தின் பாரம்பரிய கலை இலக்கியங்களும் பண்பாட்டு விழுமியங்களும் அச்சமூகம் நம்பிக்கை கொண்டுள்ள தொன்மங்களும் முக்கியமானவை. அந்தவகையிலேதான் வஞ்சகமில்லாத வாழ்க்கை முறையையும் - விருந்திருக்க உண்ணாத வேளண்மைத் தனத்தையும் -வந்தோரை வாஞ்சையோடு வரவேற்று வாழவைப்பதில் வற்றாத மனப்போக்கையும் - சாதி மதபேதமற்ற சமரச நோக்கையும் - சகோதரத்துவ மனப்போக்கையும் வரித்துக்கொண்டுள்ள கிழக்கிலங்கைத் தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டு அடையாளமாக விளங்கும் கண்ணகி தொன்மங்களை அடியொற்றிய கண்ணகி கலை இலக்கியங்களும் பண்பாட்டு விழுமியங்களும், உலகமயமாக்கம் - நுகர்வுக் கலாசாரம் - தகவல்தொழிநுட்பத்தின் அதீதவளர்ச்சி மற்றும் இயந்திர நாகரீகம் போன்ற புறத்தாக்கங்களால் கற்பழிந்துவிடாமல் காப்பாற்றிப் பேணி வளர்த்து அவற்றை அடுத்த தலைமுறையிடம் பக்குவமாகவும் பவித்திரமாகவும் கையளிக்கவேண்டிய கடப்பாடு எமக்குண்டு. இத்தகைய ஒரு வரலாற்றுக் கடமையை நிறைவேற்றவே '' ; கண்ணகி கலை இலக்கிய கூடல்'' என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு கடந்த நான்கு வருடங்களாக இத்தகைய ; கண்ணகி கலை இலக்கிய விழாக்கைளைக் கட்டமைத்து வருகிறோம்.
திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவானது இந்து சமுத்திரத்தின் வங்காள விரிகுடாக் கடலை அண்டியதாய் வடக்கே சின்னமுகத்துவாரத்திலிருந்து தெற்கே உமிரி வரை நீண்டு கிடக்கும் கடலும் கடல் சார்ந்த 'நெய்தல்' நில வளத்தையும் , சாகாமம் , றூபஸ்குளம் ,கஞ்சிகுடியாறு போள்ற பாரிய நீர்த் தேக்கங்களால் பாசனவசதியளிக்கப்படும் ஊரக்கைவெளி,தாலிபோட்டாற்றுக் கண்டம்,சேனக்காடு ,போட்டாக்குளம் , சாவாறு , கோம்பக்கரச்சை , கஞ்சிகுடியாற்றுக்கண்டம் போன்ற வயலும் வயல் சார்ந்த 'மருத' நில வளத்தையும் : வடமூசா , வட்டமடு போன்ற காடும் காடுசார்ந்த 'முல்லை' நில வளத்தையும் கொண்டது. சங்கமன்கண்டிப் பிள்ளையார், திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி , கோரைக்களப்பு மங்கமாரியம்மன் , தம்பிலுவில் ஸ்ரீ கண்ணகையம்மன் போன்ற காவல் தெய்வங்களால் புடைசூழப்பட்ட பூமி இது. பல அண்ணாவிமார்களையும் ,கூத்துக் கலைஞர்களையும்,இசைக்கலைஞர்களையும்,நாடகக் கலைஞர்களையும் கண்ட மண் இது. புலவர் வில்லியம்பிள்ளை ,பண்டிதர் குஞ்சித்தம்பி ,வித்தவான் செபரெத்தினம் போன்ற தமிழறிஞர்களைத் தந்தது இப்பூமி. இவ்வாறு நிலவளமும் நீர் வளமும் கலை வளமும் ,கல்விவளமும் ,ஆன்மீகவளமும் நிரம்பப்பெற்ற திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள வரலாற்றுப் புகழ்மிக்க தம்பிலுவில் ஸ்ரீ கண்ணகையம்மன் ஆலய கண்ணகி கலையரங்கிலே இவ்விழா தொடங்கப்பெறுவது இயங்கியல் விதிமட்டுமல்ல இறைவனின் சித்தமுமாகும்.
என்னதான் நவீன கலையிலக்கிய கோட்பாடுகளும் வடிவங்களும் காலத்துக்குக் காலம் தோற்றம் பெற்றாலும் மனித மனங்களைச் செழுமைப்படுத்தும் வல்லமை பாரம்பரியக் கலை இலக்கிய வடிவங்களுக்கே உண்டு.அதனால்தான் கண்ணகி கலை இலக்கியங்களை மக்கள் மத்தியிலே பரவலாக்கும் நோக்குடன் ஆம்பிக்கப்பெற்ற கண்ணகி கலை இலக்கிய விழாவானது கிழக்கிலங்கைத் தமிழ் சமூகத்தை ஒரு பண்பாட்டுத் தளத்தில் ஒன்றிணைத்து அவர்களைச் சமூக பொருளாதார கல்வி கலை இலக்கிய ஆன்மீக மேம்பாட்டை நோக்கி அறிவு பூர்வமாக ஆற்றுப்படுத்துவதிலும் முனைப்புக் கொண்டுள்ளது. எதிர்காலத்தில் விழாக்களோடு மட்டும் நின்றுவி;டாமல் - கலை இலக்கியங்களோடு மட்டும் எமது செயற்பாடுகளை மட்டுப்படுத்தாமல் சமூக பொருளாதார மேம்பாட்டுப் பணிகளிலும் நாம் ஈடுபடவுள்ளோம். சமூக நோக்குடனேயே இவ்விழாக்களை நாம் கட்டமைத்து வருகிறோம். நாம் மனங்கொண்டுள்ள சில திட்டங்களை இவ்விடத்தில் கோடிட்டுக்காட்டுவது பொருத்தமென எண்ணுகின்றேன்.
ழ கிழக்குப்பல்கலைக்கழகம் மற்றும் மட்டக்களப்பு சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகம் ஆகிய கல்விசார் நிறுவனங்களினூடாக பல்கலைக்கழக இந்துநாகரிகத்துறையில் கண்ணகி வழிபாட்டு முறைகளை ஒரு பாடநெறியாக்கவும் , தமிழ்மொழித் துறையில் கண்ணகி இலக்கிய பீடம் ஒன்றினை உருவாக்கி அதன் மூலம் கண்ணகி இலக்கிய ஆய்வுகளை நடாத்தவும் , பல்கலைக்கழகத்தில் நாடகமும் அரங்கியலும் பயிலும் மாணவர்களுக்குக் கண்ணகி கலைகளை பயிற்றுவிக்கவும் ,விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தில் சிலப்பதிகாரம் மற்றும் 'கண்ணகி வழக்குரை' காவியத்தில் வரும் ஆடல் பாடல்களை மீளுருவாக்கம் செய்யவும் ஆவனசெய்யதல்.
> தமிழறிஞர் குழு ஒன்றின் மூலம் 'கண்ணகி வழக்குரை' காவியத்திற்கு உரை எழுதிப் பதிப்பித்து அதனை மக்களிடையே பரவலாக்குதல்.
> ஏட்டுப்பிரதிகளாகவுள்ள கண்ணகி இலக்கியங்களைத் தேடியெடுத்து அச்சில் பதிப்பித்தல் ,ஏற்கனவே பதிப்பிக்கப்பெற்றவற்றை மீள் பதிப்புச் செய்தல்.
> யுத்தக் கொடுமைகளினால் பாதிக்கப்பட்ட எமது சமூகம் அவாவி நிற்கும் சமூக பொருளாதார கல்வி மேம்பாட்டுத் திட்டங்களை மேற்கொள்ளல்.
> வேலையற்றுள்ள இளைஞர் யுவதிகளுக்கான மற்றும் விதவைக் குடும்பங்களுக்கான வாழ்வாதாரப் பணிகள் - சுயதொழில் திட்டங்களை வகுத்துச் செயற்படல்.
> சூழல் பாதுகாப்புச் செயற்பாடுகளிலும் கரிசனை கொண்டுழைத்தல்.
> வறிய மாணவர்களுக்கான கல்வி வசதிகளுக்கு உதவுதல்.
> அனர்த்தங்களின் போது மக்களுக்கு உதவுதல் - பொது இடங்களைச் சுத்தமாக வைத்திருக்க சிரமதானங்கள் மற்றும் இரத்ததானம் போன்ற மனித நேயப் பணிகளிலும் ஈடுபடல் என்பவை அவற்றுள் சில.
இவ்விழா முடிந்ததும் 'கண்ணகி கலை இலக்கியக் கூடல்' அமைப்பினை ஓர் பண்பாட்டு நிறுவனமாக பதிவுசெய்யவிருக்கின்றோம். இதுவரை நடைபெற்ற மூன்று கண்ணகி கலை இலக்கிய விழாக்களிலும் சுமார் 700 பேர் பேராளர்களாகப் பதிவுசெய்து கொண்டுள்ளனர்,இந்த நான்காவது கண்ணகி கலை இலக்கிய விழாவின் நிறைவில் பேராளர்களின் எண்ணிக்கை ஆயிரமாகலாம். அடுத்த ஆண்டு முற்பகுதியில் இவர்களையெல்லாம் ஒன்றுகூட்டிப் 'பேராளர்மாநாடு' ஒன்றினை நடாத்தி எமது எதிர்காலச் செயற்பாடுகளுக்கான – பணிகளுக்கான 'திட்டவரைபு' ஒன்றினைத் தயாரித்து அந்நிகழ்ச்சித் திட்டத்தின் அடிப்படையில் இயங்குவதற்குக் 'கண்ணகி கலை இலக்கியக் கூடல்' கங்கணம் கட்டியுள்ளது. எனவே எமது சமூகத்தினைச் சேர்ந்த கல்விமான்களே! தொழில்சார் நிபுணர்களே ! துறைசார் விற்பன்னர்களே ! எழுத்தாளர்களே ! கலைஞர்களே ! மற்றும் கண்ணகி கலை இலக்கிய ஆர்வலர்களே! அனைவரும் எம்முடன் இணைந்துகொள்ளுங்கள். கடந்த வருட விழாவிலே இதற்கான தீர்மானங்களை நாம் எடுத்திருந்தபோதும் அது சாத்தியப்படவில்லை.காரணம் அதற்கான வளங்களைத் தேடமுடியவில்லை,எனினும் எமது முயற்சியைக் கைவிடமாட்டோம்.
> கலை இலக்கியங்களினூடாகச் சமூகப் பணியாற்றுவோம்.
> கலை இலக்கியங்களினூடாகப் பொருளாதார மேம்பாடைவோம்.
> கலை இலக்கியங்களினூடாக மனித உறவுகளையும் விழுமியங்களையும் கட்டியெழுப்புவோம்.
> கலை இலக்கியங்களினூடாக ஆன்மீக எழுச்சியை ஏற்படுத்துவோம்.
> கலை இலக்கியங்களினூடாக யுத்த அவலங்களினால் நொந்துபோயுள்ள மனித நெஞ்சங்களை ஆசுவாசப்படுத்துவோம்.
இவற்றிக்காக முழுநேரமும் உழைப்பதற்கான உறுப்பினர்கள் பலர் கண்ணகி கலை இலக்கியக் கூடலில் உள்ளனர். ஆனால் எமக்குச் சவாலாகவுள்ள ஒரே ஒரு விடயம் வளப்பற்றாக் குறையேயாகும்.இந்தப் பின்புலத்தில் இங்கு கூடியுள்ள அனைவரிடமும் விநயமாக வேண்டிக்கொள்ளவதென்றால் - இதை மகாகவி பாரதியின் பாடல் வரிகளிலே கூறப்போனால்,
' நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர் !
நிதி குறைந்தவர் காசுகள் தாரீர் !
ஆண்மையாளர் உழைப்பினை நல்கி
அதுவுமற்றவர் வாய்ச்சொல்லருளி
இப் பெருந்தொழில் நாட்டுவம் வாரீர் !
இந்த செய்தியைச் இங்கு வந்திருப்பவர்கள் இங்கு வராதவர்களிடம் எடுத்துச் செல்லுங்கள்.
நன்றி ! வணக்கம்.
தொடர்பு :
கண்ணகி கலை இலக்கியக் கூடல்
45 Aய பிரதான வீதி ,சின்ன ஊறணி
மட்டக்களப்பு
கைபேசி : 0094 0771900614 , 0094 0777492861
மின்னஞ்சல் : kannahivizla@gmail.com
வலை : www.kannahikoodal.com