இந்த ஆண்டுக்கான கண்ணகி இலக்கிய விழாவை அம்பாறை மாவட்டத்தில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. கண்ணகி கலை இலக்கிய மன்றத்தின் கூட்டம் ஆசிரியர் கலாசாலையில் மன்றத்தின் தலைவர் கோபாலகிருஸ்ணன் தலைமையில் நடைபெற்றது. இதன்போது துணைத் தலைவர் சதாசிவம், எதிர்மன்னசிங்கம் உட்பட மன்றத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது கண்ணகி கலை இலக்கிய மன்றத்தின் இந்த ஆண்டின் வேலைத்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
இந்த ஆண்டில் கண்ணகி இலக்கிய விழாவை அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்றில் நடத்த தீர்மானிக்கப்பட்டது. எதிர்வரும் ஜூன்மாதம் 15ம், 16ம் திகதிகளில் நடத்த ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன் கடந்த ஆண்டு கண்ணகி இலக்கிய விழா நடத்து இடத்தில் கண்ணகி சிலை நிறுவ முடிவு காணப்பட்ட போதும் அது இதுவரையில் நிறைவேற்றப்படவில்லையென சுட்டிக்காட்டப்பட்டது.
இதனடிப்படையில் சிலை நிறுவுவதற்கு தேவையான நிதிகளை திரட்டுவதற்கும், புலம் பெயர்ந்துள்ள உறவுகளிடமும் இதற்கான நிதிகளை திரட்ட நடவடிக்கை எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன் கண்ணகி விழாவையொட்டி வெளியிடப்படும் கூடல் சஞ்சிகையின் பரல் இரண்டு வெளியீடு தொடர்பிலும் கலந்துரையாடல் இடம் பெற்றது.
இதனடிப்படையில் மன்றத்தின் தலைவர் தலைமையில் சஞ்சிகையின் தொகுப்பாளராக இன்பராசா நியமிக்கப்பட்டதுடன் மேலும் 9 பேர் சஞ்சிகை வெளியீட்டுக் குழுவுக்கு நியமிக்கப்பட்டனர்.
அத்துடன் கண்ணகி விழாவை முன்னிட்டு சிலை நிறுவும் பணிகளுக்காக த.அழகையா, சதா உட்பட மூவர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது.
2011ம், 2012ம் ஆண்டின் கண்ணகி விழாவை வெற்றிகரமாகவும், சிறப்பாகவும் நடத்தி முடித்த நிலையில் இந்த ஆண்டும் விழாவை சிறப்பாக நடத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என கண்ணகி கலை இலக்கிய மன்றத் தலைவர் கோபாலகிருஸ்ணன் கோரிக்கை விடுத்தார்.