“10 ஆவது கண்ணகி கலை இலக்கிய விழா மண்முனைத் தென்மேற்குப் பிரதேசத்தில் மிகப் பிரமாண்டமாகவும் கோலாகலமாக இம்மாதம் (செப்டம்பர்) 25, 26, 27, 28 ஆம் திகதிகளில் நிகழவுள்ளது. அதனை முன்னிட்டு கண்ணகி கலை இலக்கிய விழா நடைபெறவுள்ள இடம் திகதி போன்ற தகவலைக் கட்டியங்கூறும் காட்சிப்படுத்தல் பதாதை இன்று (02.09.2025) மாலை 4.30 மணியளவில் மகிழடித்தீவு சந்தியில் கலாசார மண்டபத்திற்கு முன்னால் மண்முனைத் தென்மேற்குப் பிரதேச கௌரவ தவிசாளர் திரு.இ.கிரேஸ்குமார் அவர்களினால் திரைநீக்கம் செய்யப்பெற்றது.

  கண்ணகி கலை இலக்கியக் கூடலின் 10 ஆவது கண்ணகி கலை இலக்கிய விழாவின் விழாக்குழுத் தலைவர் திரு. அருட்சிவம் அவர்களின் தலைமையில் ஒரு நிமிட மௌன இறைவணக்கத்துடன் நடைபெற்ற இந் நிகழ்வில் கூடலின் தாய்ச்சங்க உறுப்பினர்கள், 10 வது விழாக்குழு நிர்வாகத்தினர் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்து சிறப்பித்தனர். 

  தவிசாளர் தனது உரையில் நிச்சயமாக இவ்விழாவினால் இவ்வருடம் இப்பிரதேசத்தில் ஒரு பெரிய கலை எழுச்சி ஏற்படுத்தும் என எதிர்பார்பதாக குறிப்பிட்டார். இதனைத் தொடர்ந்து சோலையூரான் திரு. தனுஸ்கரன் அவர்களின் நன்றியுரையுடன் இந்நிகழ்வு நிறைவுற்றது.